Wednesday, January 2, 2019

மக்கள் பிரதான கட்சிகளுக்கு வாக்களிக்க நினைப்பது அடிமை மனோபாவத்தின் வெளிப்பாடே

 
பேராசிரியர் லியனகே அமகீர்த்தி அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிங்களத்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார்.சிங்கள இலக்கியத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட இவரின் சிறுகதை மற்றும் புனைகதை நூல்கள் பல வெளிவந்திருப்பதோடு தேசிய மட்டத்தில் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. இவர் சிங்களச் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர்.
அரசியல், சமூகம், சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து எழுதியும் பேசியும் வருகிறார். ஒரு அறிவுஜீவியாக இருந்து கொண்டு செயற்களத்திலும் இயங்குவது அவரது சிறப்பம்சம் எனலாம். அவருடன் மேற்கொண்ட உரையாடலே இது.
சந்திப்பு- இன்ஸாப் ஸலாஹுதீன்
நல்லாட்சி என்பது வார்த்தை அளவில் சுருங்கிவிட்ட ஒன்றாக ஆகியிருக்கின்றது.ஜனவரி 8 மாற்றத்திற்கு பங்களித்தவர் என்றவகையில் இதனை எப்படி உணர்கிறீர்கள்.?
உண்மையில் இந்த மாற்றத்திற்குப் பங்களித்தவர்களுக்கும் ஒரு உயர்ந்த அரசியல் கலாசாரத்தை எதிர்பார்தவர்களுக்கும் நல்லாட்சி என்பது ஒரு பெருத்த தோல்விதான். இதுதான் இலங்கையில் இருக்கின்ற அபாயம்.ஏனெனில் பிரபுத்துவ அரசியல் முறைமையை நாம் நம்ப முடியாதுள்ளது. ஒரு ஆட்சியை வீழ்த்தி தமது ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதுதான் அவர்களது நோக்கம். முன்மாதிரியான ஒரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு கிடையாது.
ஜனவரி 8 மாற்றத்திற்கு இரண்டு மூன்று  வருடங்களுக்கு முன்பிருந்தே ஊடகங்களும்,பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், புத்திஜீவிகளும், சிவில் செயற்பாட்டாளர்களும் பங்களித்தார்கள். ஆனால் இன்று அவர்கள் அனைவரும் தோல்வியடைந்திருக்கிறார்கள்.
இருந்தாலும் இந் நிலையில் தோல்வி மனப்பான்மையில் நாம் ஓரமாய் நிற்காமல் நம்பிக்கையளிக்கக் கூடிய ஒரு அரசியல் சக்தியை உருவாக்கிக்கொள்ள முனைய வேண்டும்.அதற்காக உழைக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
பிரபுத்துவ அரசிலை நம்ப முடியாது என்பதற்காக அரசியல் முன்மாதிரியை விட்டுக் கொடுக்கவும் முடியாது. ஜனநாயக கதையாடல் எத்தகைய வறுமையில் இருக்கின்றது என்பதையே இது காட்டுகிறது.
அரசியல் அதிகாரத்திற்கு வந்ததும் அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவே ஆட்சிக்கு வருபவர்கள் நினைக்கின்றனர்.அதற்காக அரசியல் ரீதியான டீல்களை வைத்துக் கொள்கிறார்கள். முன்மாதிரியான அரசியல் என்பது மருந்திற்கும் இல்லாமல் இருக்கிறது
ஜனவரி 8 இன் பின்னர் தோல்வியடைய வேண்டிய ஒரு பிரிவினர் தோல்வியடைந்தனர்.அவர்கள் வென்றிருந்தால் நாடு இன்னும் சிக்கலில் போய் முடிந்திருக்கும்.அது நல்ல விடயம்தான்.ஆனால் ஊழல் விடயத்தில்  நாம் கொஞ்சம் கூட மகிழ்ச்சியடைவதற்கில்லை.இப்பொழுது முன்பிருந்த ஊழல்வாதிகளும் இவர்களைப் பார்த்து ஊழல்வாதிகள் என்கின்றனர்.இது பெரிய நகைச் சுவை அல்லவா?
நாட்டில் என்னதான் நடந்தாலும் மக்கள் பிரதான இரண்டு கட்சிகளுக்கே வாக்களிக்கின்றனர்.ஏன் பெரும்பாலான மக்களின் மனோபாவம் இப்படி இருக்கின்றது.?
சுமார் 70 ஆண்டுகளாக இந்த நாட்டை இரண்டு அல்லது மூன்று பிரபுக் குடும்பங்கள் ஆட்சி செய்துள்ளன. எமது மக்களுடைய பிரக்ஞை ஒரு அரச குடும்பம் போல இருக்கிறது.
சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை மக்கள் ஒருவகை அடிமை மனோபாவத்தில் இருப்பதாகவே இதனை அடையாளப்படுத்த வேண்டியுள்ளது.இதனை பின் காலனிய அடிமைத்துவம் எனலாம்.இந்த பிரபுக் குடும்பங்களின் சேவையாளர்களாக தம்மை உணர்கின்ற நிலையின் வெளிப்பாடுதான் இது.இந்தப் பிரக்ஞைக்கும் வரலாற்றுக்கும் தொடர்பு இருக்கலாம்.ஏனெனில் அரசர்களின் சேவகர்களாக வாழ்ந்த ஒரு நிலையே வரலாற்றில் காணப்பகிறது.
எனவே இந்த அடிமை மனோபாவத்தை உடைப்பதற்கான பலமான ஒரு தாக்குதலை மேற்கொள்ள வேண்டும்.இந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது இடதுசாரிகளுக்கு அல்லது ஜே.வி.பி போன்ற கட்சிகளுக்கு இத்தகைய அடிமை மனோபாவத்தை உடைக்கும் செயற்பாடுகளை கிராம மட்டங்களிலிருந்து ஆரம்பிக்க முடியும்.
பிரதான கட்சிகளுக்கு வாக்களிக்கின்ற அடிமை மனோபாவத்திலிருந்து நாம் வெளிவர வேண்டும்.புதிய ஒரு அரசியல் சக்திக்கு நாம் வாக்களித்துப் பார்க்க வேண்டும்.அதற்கு மக்களை அறிவூட்ட வேண்டும்.வித்தியாசமாக சிந்திக்குமாறு மக்களுடைய மனோபாவத்திற்கும் அப்பால் போய் அவர்களது பிரக்ஞையில் இருக்கின்ற அடிமைத்துவத்தை நீக்க முயற்சிக்க வேண்டும்.இதனை உடைக்காத வரையில் உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது.
இதனைச் செய்வதற்கான பலம் மிக்க அணியாக யாரைக் கருதுகிறீர்கள்?
ஜனநாயக முறையின் கீழ் பாராளுமன்றம் இருக்கும் போது ஒருவகையில் அது எமக்குத் தரப்படுகின்ற மைதானம் போன்றதாகும். நாங்கள் வாக்காளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் என்றவகையில் எமக்கும் ஒரு மைதானம் தரப்படுகிறது.இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமானது
கடந்த 70 வருட அரசியல் வரலாற்றை நோக்கினாலும் 20 வருட அரசியல் வரலாற்றை நோக்கினாலும் ஏன் அண்மைய இரண்டு அல்லது மூன்று வருட வரலாற்றைப் பார்த்தாலும் மக்கள் விடுதலை முன்னணிதான் நாடு பூராகவும் வேர்களைக் கொண்ட ஒரு சக்தியாக இருக்கிறது. அடிமை மனோபாவத்தை உடைத்து ஒரு புதிய அரசியல் சக்தியை கட்டியெழுப்புவதற்கான ஆற்றல் அவர்களிடம் காணப்படுகிறது.
என்னைப் பொறுத்தவரையில் ஜே.வி.பி ஒரு சிறிய கட்சியல்ல.பிரதான அரசியல் நீரோட்டத்தில் அவர்களும் கலந்துவிட்டனர்.எனவே அவர்ளுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.
அதேபோல இனப்பிரச்சினை அல்லது அதிகாரப்பகிர்வு போன்ற விடயங்களில் ஈடுபாட்டு காட்டும் மக்கள் விடுதலை முன்ன்னியை விஞ்சிய அரசியல் சக்திகள் இருக்க முடியும்.ஆனால் அவர்களின் ஆளணி குறைவாக இருக்கிறது.அதேநேரம் இலங்கையின் சிங்கள பௌத்தத்தின் பிரக்ஞையை உள்வாங்கிய நிலையில் அவர்களால் பயணிக்க முடியும்.
மக்கள் ஜே.வி.பியை ஆதரிக்கின்றனர்.அவர்களது பேச்சுக்களை செவிமடுத்து கைதட்டுகின்றனர்.ஆனால் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.ஏன்?
மக்கள் விடுதலை முன்ன்னியும் இது குறித்து சிந்திக்கின்றது.அவர்களது தலைவர்கள் கூட பகிரங்கமாக இது குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
சுதந்திரம் கிடைத்து இத்தனை வருடங்களாகியும் இலங்கை மக்கள் பிரக்ஞை பூர்வமாக இடதுசாரிகளாகவும் பிரக்ஞையற்ற நிலையில் வலதுசாரிகளாகவும் இருக்கின்றனர்.இது சிங்கள பௌத்தர்களின் நிலைப்பாடு.முஸ்லிம்களினதும் தமிழ் மக்களினதும் நிலைப்பாடு பற்றி நான் அறியவில்லை.
இதற்கு முதல் காரணம் நான் மேலே சொன்ன அடிமை மனோபாவம். சேனாநாயகர்கள்,பண்டாரனாயகர்கள்,ஜயனவர்தனர்கள் கண்டி இராஜதானியின் நீட்சி போல இருக்கிறார்கள்.சில இடதுசாரிக் கட்சிகளும் இப்படியாகத்தான் இப்போது இருக்கின்றன.
ஏன் வாக்களிப்பதில்லை என்பதற்கு 88 கலவரங்களின் கொடிய நிழல் பற்றிய அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம்.ஆனால் அந்த அச்சம் அவசியமற்றது என நான் கருதுகின்றேன்.
திறந்த பொருளாதாரத்தினால் வெளிப்படையாக நாம் காண்கின்ற அலங்காரங்கள் இல்லாமல் போகுமோ என்ற அச்சம் நாகரிகமடைந்த நுகர்வுவாத மத்திய வர்க்கத்திடம் காணப்படலாம்.ஆனால் ஜே.வி.பி எத்தகைய பொருளாதாரக் கொள்கையை கடைபிடிக்கப் போகிறது என்பதை வெளியிளிருந்து என்னால் சொல்ல முடியாது.ஆனால் இந்தத் தேர்தலுக்கு அது முக்கியமில்லை.
சிவில் சமூக அமைப்புக்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது?
இன்று சிவில் அமைப்புக்கள் பல துண்டுகளுக்காக பிரிந்துள்ளன.இதற்கு ஜனவரி 8 இன் முன்மாதிரியை தாரைவார்த்தவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
இன்றைய சூழலில் இலங்கையின் மத்தியதர வர்க்கம் என்பது விரிவடைந்துள்ளது. எல்லாக் கிராமங்களிலும் உள்ள மத்திய வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அனைவரும் சிவில் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டிய ஒரு கடப்பாடு இருக்கிறது.
குறிப்பாக மக்களிடம் இருக்கின்ற அடிமையை விடுதலை செய்து பிரதான இரண்டு கட்சிகளையும் தவிர வாக்களிப்பதற்கு வேறு தெரிவுகள் இருக்கின்றன என்பது பற்றி சிந்திப்பதே அவர்களது முதல் பணியாக இருக்க வேண்டும். இது விநோதமான ஒன்றல்ல.வரலாற்றில் நாம் அப்படி வாக்களித்திருக்கிறோம்.என்.எம் பெரேரா வரலாற்றில் பிரதமராக வருவதற்கு கொஞ்சம் வாக்குகளே குறைந்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சிவில் சமூக செயற்பாடுகளில் படித்த மத்தியதர வர்க்கத்தினர் தம்மை தூரப்படுத்திக் கொள்வது ஏன் என நினைக்கிறீர்கள்?
எந்த நாட்டிலும் மத்தியவர்க்கத்தின் மனோபாவம் இப்படித்தான் இருக்கிறது.தேவையற்ற பிரச்சினைகளில் ஏன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர்.தாங்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவாக இருக்கிறோம்.ஏனைய பிரச்சினைகளைஅது எங்களின் பிரச்சினையல்ல என அவர்கள் நினைக்கின்றனர்.இது ஆரோக்கியமான மனோநிலையாகாது.
என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்கிறேன்.பொருளாதார ரீதியில் நான் சிறந்த நிலையில் இருக்கிறேன் என்று வைத்துக் கொண்டால். நாட்டில் மலையளவு இருக்கும் கடன் சுமை குறித்து நான் சிந்திக்காமல் இருக்க முடியுமா?
நாங்கள் விலகி நின்று ஆட்சிக்கு கொலையாளிகளை, ஊழல்பேர்வழிகளை, மோசமானவர்களை அனுப்புகிறோம் என்றால் அதன் விளைவு எங்கள் வீட்டுக் கதவுகளையும் தட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மத்திய வர்க்கத்தின் இந்த போலியான மனோபாவம் மாற வேண்டும்.இது எங்களுக்கு சம்பந்தமில்லை என்று எமது சமூக அக்கறையை தள்ளி வைக்க முடியாது.
இது போன்றவர்கள் குரல்கொடுக்க முன்வரும் போது இனவாதிகள் சமூக ஊடகங்களில் அவர்களை இழிவுபடுத்துகின்றனர்.தமது சொந்தப் பெயர்களிலேயே இதனை மேற்கொள்கின்றனர். இதுவும் பிழையான ஒரு மனோபாவம்தான். இருந்தாலும் அவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்கின்றனர் என்பதை அறியாமல் உள்ளனர்.
தடைகள் இல்லாத பாதைகள் இருப்பதில்லை.இவை எல்லாவற்றையும் கடந்து நாம் பயணிக்க வேண்டும்.
அப்படியாயின் ஒவ்வொரு பிரஜையினதும் பணி என்ன?
தேர்தல்தான் ஜனநாயகத்தை நிலைநாட்ட  சிறந்த சந்தர்ப்பம் என நினைக்கிறோம்.அது பிழையல்ல.அதுவும் ஒரு சந்தர்ப்பம்தான்.ஆனால் குடியுரிமை என்பது அதிலிருந்து வேறுபட்டது.நாங்கள் ஒரு ஜனநாயக முறையின் கீழ் இருக்கிறோம்.எங்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிக்குச் செல்பவர்கள் செய்யும் நல்லவைகளுக்கும் கெட்டவைகளுக்கும் எங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.
ஆட்சிக்குச் செல்பவர்கள் சிலநேரம் தங்களது ஆட்சிக்காலம் குறித்து மட்டுமே சிந்திப்பார்கள்.ஆனால் பிரஜை என்பவர் என்றைக்குமாக சிந்திப்பவர்.தான் வாழும் சூழல் குறித்து எப்போதும் பொறுப்புணர்வுடன் செயற்படுபவர்.
இயங்குதன்மை கொண்ட குடியுரிமை என்பது நாட்டின் அரசியல் பொருளாதாரம்,கலாசாரம், என அனைத்தையும் விமர்சன ரீதியாக நோக்குவதுடன் அது குறித்த கதையாடல்களை ஆரம்பிப்பதாகும். குறைந்தது தனக்குத் தெரிந்தவர்களுடனாவது அந்த உரையாடலை அவர் மேற்கொள்ள வேண்டும்.ஊடகங்களுடன் சம்பந்தப்பட்டு தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த முடியுமாயின் அதனையும் செய்ய வேண்டும். பிரஜை என்பவர் அடிமையல்ல  விவாதிப்பவர், கேள்விகேட்பவர், சிந்திப்பவர். வெறுமனே மேலே பார்த்துக் கொண்டு வாழ்வது ஒரு நல்ல பிரஜையின் பண்பல்ல.இதுவே அடிமை மனோபாவத்திற்கு எம்மை இட்டுச் செல்கிறது.
எனவே இந்தத் தேர்தல் கிராமத் தலைவர்களும் கிராம மட்டத்திலுள்ளவர்களும் ஒரே கோட்டில் சந்திக்கின்றபடியால் பங்கேற்பு ஜனநாயகம் குறித்த உரையாடல்களை இன்னும் சக்தி வாய்ந்ததாய் அமைத்துக் கொள்ள இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்.இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவவிட்டுவிடக் கூடாது.

No comments:

Post a Comment